ஐபிஎல் 2025: யுஸ்வேந்திர சஹால் அபாரம்; கேகேஆரை வீழ்த்தி வரலாறு படைத்தது பஞ்சாப் கிங்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த பிரியன்ஷ் ஆர்யா 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 22 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Also Read
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஜோஷ் இங்கிலிஸும் 2 ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மற்றொரு தொடக்க வீரரான பிரப்ஷிம்ரன் சிங் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல் 7 ரன்களிலும், நெஹால் வதேரா 10 ரன்களிலும், சூர்யன்ஷ் ஷெட்ஜ் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஷஷாங்க் சிங் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களுக்கும், அவருடன் இணைந்து விளையாடிய சேவியர் பார்ட்லெட் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணிக்கு வழக்கம் போல் சுனில் நரைன் மற்றும் குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுனில் நரைன் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து குயின்டன் டி காக்கும் 2 ரன்களுடன்ந் அடையைக் கட்டினார். இதனால் கேகேஆர் அணி 7 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கேப்டன் அஜிங்கியா ரஹானே மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அஜிங்கியா ரஹானே 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷியும் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 37 ரன்களை எடுத்த கையோடு ஆட்டமிழந்தார். அதன்பின் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ரமந்தீப் சிங், ஹர்ஷித் ரானா உள்ளிட்டோரும் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் கேகேஆர் அணி 79 ரன்களிலேயே 8 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.
அதேசமயம் அந்த அணிக்கு கைவசம் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில் 33 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த் ஆண்ட்ரே ரஸல் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் மீதான அழுத்ததை குறைத்தார். ஆனால் மறுபக்கம் விளையாடி வந்த வைபவ் ஹரோரா ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸலும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துடன் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Also Read: Funding To Save Test Cricket
பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியும் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலிலும் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now