
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கௌகாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மேற்கொண்டு ரன்கள் எதையும் சேர்க்காமல் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் சஞ்சு சாம்சனுடன் இணைந்த நிதீஷ் ரானா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய நிதீஷ் ரானா 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிதீஷ் ரானாவும் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 81 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் துருவ் ஜூரெல், வநிந்து ஹசரங்கா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.