
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரப்சிம்ரன் சிங் 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பிரையன்ஷ் ஆர்யா மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் தனது அறிமுக ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய பிரியான்ஷ் ஆர்யா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 16 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.