ஐபிஎல் 2025: ஆர்சிபியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 65ஆவது லீக் போட்டியில் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தியது.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 17 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் ஹென்ரிச் கிளசென் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 24 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய அனிகேத் வெர்மா ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 26 ரன்களுக்கும், நிதீஷ் ரெட்டி 4 ரன்களுக்கும், அபினவ் மனோகர் 12 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபக்கம் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.
மேலும் அவருடன் இணைந்த கேப்டன் பாட் கம்மின்ஸும் அதிரடியாக விளையாடி ரன் வேகத்தை அதிகரித்தார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷான் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 94 ரன்களையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆர்சிபி அணி தரப்பில் ரொமாரியோ ஷெஃபெர்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் பில் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மயங்க் அகர்வாலும் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ராஜத் பட்டிதார் 18 ரன்களுக்கும், இன்றைய போட்டிக்கான கேப்டன் ஜித்தேஷ் சர்மா 24 ரன்களிலும், ரொமாரியோ ஷெஃபர்ட் ரன்கள் ஏதுமின்றியும், டிம் டேவிட் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க ஆர்சிபி அணியின் தோல்வியும் உறுதியானது.
Also Read: LIVE Cricket Score
பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதன் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now