
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை நடத்தியது.
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகம் வீரர் டெவால்ட் பிரீவிஸ் லெவனில் இடம்பிடித்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி தொடக்க வீரர் ஷேக் ரஷீத் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாம் கரணும் 9 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்டினார்.
மேற்கொண்டு அதிரடியாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் ஆயூஷ் மாத்ரே 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதனால் சிஎஸ்கே அணி பவர்பிளே ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா - டெவால்ட் பிரீவிஸ் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை சிறிது நேரம் தடுத்து நிறுத்தினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே 12 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.