
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 27 ரன்களையும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப், விஜயகுமார், ஜான்சென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். அதன்படி இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.