
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது. பின்னர் மழை காரணமாக இப்போட்டியானது 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சால்ட் 4 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விராட் கோலியும் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ராஜத் படிதார் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 4 ரன்களுக்கும், ஜித்தேஷ் சர்மா 2 ரன்களுக்கும், குர்னால் பாண்டியா ஒரு ரன்னிலும் என விகெட்டை இழக்க, ரஜத் படிதாரும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய இம்பேக் வீரர் மனோஜ் பன்டேஜ் ஒரு ரன்னிற்கு நடையைக் காட்ட ஆர்சிபி அணி 42 ரன்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.