
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் இத்தொடர் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற இரு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தின.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுட்ன் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் பெரும்பாலான மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், தனது அறிமுக போட்டியில் விளையாடிய இளம் வீரர் ஒருவர் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அதன்படி இப்போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக விளையாடிய விக்னேஷ் புதுர் எனும் அறிமுக வீரர் தனது முதல் போட்டியிலேயே அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணிக்கு அழுத்ததை ஏற்படுத்தியுள்ளார்.