
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியன் ரிக்கெல்டன் 61 ரன்னிலும், ரோஹித் சர்மா 53 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் துணைக்கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலா 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை தரப்பில் கரண் சர்மா மற்றும் டிரென்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளது.