
ஐபிஎல் 17ஆவது சீசனுக்காக நடைபெற்று முடிந்த வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து விச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடிகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். இதன் மூலம் 2008 முதல் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
சொல்லப்போனால் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையை கேப்டனாக ஆஸ்திரேலியாவுக்கு வென்று கொடுத்த பட் கமின்ஸ் 20.50 கோடிகளுக்கு ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டு அதிக தொகைக்கு விலை போன வீரராக சாதனை படைத்தார். அதை அடுத்த ஒரு மணி நேரத்தில் உடைத்த மிட்செல் ஸ்டார்க் தரமானவர் என்றாலும் இவ்வளவு தொகை கொடுத்து கொல்கத்தா வாங்கிய முடிவை நிறைய ரசிகர்கள் வரவேற்கவில்லை.
ஏனெனில் 2015க்குப்பின் நாட்டுக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்து வந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான பவுலராக செயல்பட்டு வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் சமீப காலங்களில் பெரிய அளவில் விளையாடாத அவர் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்படுவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.