
கடந்தாண்டு நடந்த ஆசிய கோப்பை தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரில் தோல்வியடைந்த பிறகு இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துக்கொண்டிருக்கிறது பிசிசிஐ. அதன்படி தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20க்கு என தனி அணியும், ரோஹித் சர்மா தலைமையில் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு என தனி அணியும் செயல்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் தொடரிலும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது பிசிசிஐ. அதாவது வரும் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராக வேண்டும் என்றால் வீரர்களின் பணிச்சுமையை குறைப்பது மிகவும் முக்கியமாகும். அதற்காக தான் ஐபிஎல் தொடரில் வீரர்கள் பங்கேற்பதில் கட்டுப்பாடுகள் போடப்பட்டன.
அதாவது உலகக்கோப்பை திட்டத்திற்காக 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த 20 வீரர்களையும் ஐபிஎல்-ல் தொடர்ச்சியாக ஆட வைக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும், என பிசிசிஐ கோரியது. ஆனால் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ-யால் உத்தரவிட முடியாது, அவர்கள் 2 மாதங்களுக்கு நாங்கள் ஒப்பந்தம் செய்த வீரர்கள் என ஐபிஎல் அணிகள் தடலாடியாக கூறிவிட்டன.