
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 84 ரன்களைச் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம், ஃபகர் ஸ்மான் இணை அதிரடியாக விளையாடிய போதிலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயராகும் வகையில் பாகிஸ்தான் தொடரை எதிர்கொண்டுள்ள இங்கிலாந்து அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் தொடரில் விளையாடுவதை காட்டிலும் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொட்ரில் விளையாடி இருந்தால் அவர்களுக்கு அது பயனளித்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.