
கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையேயான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 237 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேப்டன் அஜிங்கியா ரஹானே 86 ரன்களுடனும், சர்ஃப்ராஸ் கான் 54 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அபாரமாக விளையாடி வந்த அஜிங்கியா ரஹானே சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 97 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் தனது 15ஆவது சததைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஷம்ஸ் முலானி 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தனுஷ் கோட்டியானும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசததை பதிவுசெய்த கையோடு 64 ரன்களில் விக்கெட்டை இஅந்தார். அவருக்கு அடுத்து களமிறங்கிய மஹித் அவஸ்தி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஷர்துல் தக்கூரும் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.