
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஆண்ட்ரூ பால்பிர்னி - ரோஸ் அதிர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரோஸ் அதிர் 7 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் லோர்கன் டக்கர் வழக்கம்போல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அவருடன் பால்பிர்னியும் ரன்களைச் சேர்க்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் இணைந்து 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஆண்ட்ரூ பால்பிர்னி 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய லோர்கன் டக்கர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஹாரி டெக்டரும் அதிரடியாக விளையாடினார். இதில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 73 ரன்கள் எடுத்த நிலையில் லோர்கன் டக்கர் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நெய்ல் ராக் 4, ஜார்ஜ் டக்ரெல் 6, கர்டிஸ் காம்பெர், மார்க் அதிர் ஆகியோர் தலா ஒரு ரன் என விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹாரி டெக்டர் 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.