
அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று தொடங்கிய இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரியான் ரிக்கெல்டன் - டோனி டி ஸோர்ஸி இனை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸோர்ஸி 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா 4 ரன்களிலும், ரஸ்ஸி வேண்டர் டுசென் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 39 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ரிக்கெல்டனுடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களையும் கடந்து அசத்தினர்.