
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. அந்தவகையில் ஜூலை 25ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் டாஸை வென்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் பிரின்ஸ் மஸ்வாரே 74 ரன்களையும், ஜெய்லார்ட் கும்பி 49 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பேரி மெக்கர்தி மற்றும் ஆண்டி மெக்பிரையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மார்க் அதிர் 2 விக்கெட்டுகளையும், கிரெய்க் யங், கர்டிஸ் காம்பேர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அயர்லாந்து அணிக்கு பீட்டர் மூர் 79 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் அயர்லாந்து அணி இரண்டாம் நாள் அட்டநேர முடிவுக்கு முன்னேரே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸிங் முசரபானி, தனகா ஷிவாங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டெண்டாய் சடாரா, சீன் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 40 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஜெய்லார்ட் கும்பி - பிரின்ஸ் மஸவாரே ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்களைச் சேர்த்துள்ளது.