
ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வெற்றிபெற்ற நிலையில், ஒருநாள் தொடரை ஆஃப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது. அதன்படி ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்டி பால்பிர்னி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் பால்பிர்னி 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லோர்கன் டக்கரும் 4 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரரான பால் ஸ்டிர்லிங் 25 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ஹாரி டெக்டர் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய கர்டின்ஸ் காம்பேர், நெய்ல் ராக் ஒரு ரன்னிலும், கரெத் டெலானி 16 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹாரி டெக்டர் அரைசதம் கடந்ததுடன், 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 56 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் கேப்டன் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், நங்கெயலியா கரோட்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.