
Ireland vs West Indies 3rd T20I: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் லியாம் மெக்கர்த்தி 4 ஓவர்களில் 81 ரன்களைக் கொடுத்து மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 256 ரன்களைக் குவிக்க, பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணியானது 20 ஓவர்களில் 194 ரன்களை மட்டுமே எடுத்து, 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.
இந்நிலையில் இப்போட்டியில் அயர்லாந்து அணி தரப்பில் பந்துவீசிய அறிமுக வீரர் லியாம் மெக்கர்த்தி மோசமான சாதனையைப் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் 4 ஓவர்களை வீசிய நிலையில் அதில் விக்கெட்டுகள் ஏதுமின்றி 20.20 என்ற எகானமியில் 81 ரன்களைக் கொடுத்திருந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முழு உறுப்பினர் நாட்டின் வீரராக மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரர் எனும் சாதனையை அவர் படைத்தார்.