
ஜிம்பாப்வேவியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது இடத்திற்கான ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணியில் குஷால் புர்டல் 8 ரன்களுக்கும், மல்லா 7 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த அர்ஜுன் சௌத் - ரோஹித் படேல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதத்தை நெருங்கிய அர்ஜுன் சௌத் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து ரோஹித் படேல் 29 ரன்களுக்கும், பிம் ஷார்கி 20 ரன்களிலும், குஷால் மல்லா 44 ரன்களுக்கும்,சந்தீப் லமிச்சானே 32 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய குல்சன் ஜா அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் நேபாள் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களைச் சேர்த்தது.