செய்தியாளர் கேள்விக்கு கோபமடைந்த ரோஹித் சர்மா!
மக்களிடம் சரியானதை கொண்டு சேருங்கள் என பத்திரிக்கையாளர்களிடம் கோபப்பட்டுள்ளார் ரோகித் சர்மா.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தனது 30வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். கடைசியாக 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் சதம் அடித்தார். கிட்டத்தட்ட 1100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சதம் அடித்திருக்கிறார்.
இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டபோது ரோஹித் சர்மாவிடம், “மூன்று வருடங்களுக்கு பிறகு சதம் அடித்திருக்கிறீர்கள். இந்த கம்பேக் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.” என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
Trending
முதலில் பும்ராவின் உடல்நிலை குறித்து பேசினார். பின்னர் 3 வருடம் சதம் அடிக்காதது பற்றி நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுத்தார். “மூன்று வருடமாக நான் சதம் அடிக்கவில்லை என கூறியதற்கு வருகிறேன். இதற்கு நடுவில் வெறும் 12 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறேன். ஆகையால் இது ஒன்றும் பெரிய இடைவெளி இல்லை.” என்றார்.
உடனடியாக அந்த நிருபர் எழுந்து, “நான் உங்களை விமர்சிக்க கேள்வி எழுப்பவில்லை. மூன்று வருடங்கள் ஆகிவிட்டதே, அதன் பிறகு சதம் அடித்திருக்கிறீர்களே! அதைப் பற்றிய மனநிலை தான் கேட்டேன்.” எனக்கூறி தனது கேள்விக்கு நியாயம் சேர்க்க முயற்சித்தார்.
சற்று கோபமடைந்த ரோகித் சர்மா, “கிரிக்கெட் உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டு பேசுங்கள். உங்கள் கணக்குப்படியே வருகிறேன். மூன்று வருடம் என்கிறீர்கள். 2020ஆம் ஆண்டு 8 மாத காலம் நாம் கிரிக்கெட் விளையாட வில்லை. 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் டி20 உலகக்கோப்பை இருந்ததால் அதிக அளவில் டி20 போட்டிகள் விளையாடினோம். நடுவில் 2 போட்டிகள் மட்டுமே நான் விளையாடியுள்ளேன். இதில் எங்கிருந்து வந்தது உங்கள் மூன்று வருட கணக்கு?.
மக்களுக்கு என்ன தெளிவாக காட்ட வேண்டுமோ அதை உங்களது சேனலில் காட்டுங்கள். மக்களுக்கு சரியான விஷயத்தை காட்டுங்கள். பார்வைக்காக இல்லாததை இருப்பதுபோல காட்டவேண்டாம். நிறைய டி20 போட்டிகள் விளையாடினோம். அதில் சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடினாலும் இரண்டு சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார். வேறு எவரும் இவருக்கு நிகராக அடிக்கவில்லை. ஓரிரு வீரர்களே சதம் அடித்திருக்கிறார்கள்.
அதேபோல் நான் இந்த இடைப்பட்ட காலகட்டங்களில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளேன். இப்படி இருக்கும்போது, எதன் அடிப்படையில் மூன்று வருடங்கள், இத்தனை போட்டிகள், அத்தனை போட்டிகள் என கேள்வி எழுப்புகிறீர்கள்?. புள்ளிவிவரத்துடன் மக்களுக்கு காட்டுங்கள். நீங்கள் காட்டுவதை வைத்துத்தான் அவர்களும் விமர்சனங்களை முன் வைப்பார்கள். எனக்கு மக்கள் மீது கோபம் இல்லை. உங்களைப் போன்ற ஒளிபரப்பாளர்கள் மீதுதான் கோபம்” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now