ஆஃப்கான் தொடரிலிருந்து புறக்கணிக்கப்பட்ட இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர்; பிசிசிஐ கடும் அதிருப்தி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷன், திடீரென்று நாடு திரும்பினார். அந்த டெஸ்ட் தொடருக்கு முன் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இஷான் கிஷன் கலந்துகொண்ட நிலையில் அவர் நாடு திரும்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து இஷான் கிஷனுக்கு மாற்றாக கேஎஸ் பரத் அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், இவருக்கும் லெவன் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கேஎல் ராகுல்தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
இந்நிலையில், நாடு திரும்பிய இஷான் கிஷன், எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமல், குறிப்பாக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு செல்லாமல் ஊர் சுற்ற ஆரம்பித்தார். குறிப்பாக, ஒரு தனியார் தொலைக்காட்சியின் கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, கிஷன் உற்சாகமாக காணப்பட்டார். இதன்மூலம், இஷான் கிஷன் நல்ல நிலையில்தான் இருக்கிறார் என்பது தெளிவானது. மேலும் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியுடன் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சிலும் இஷான் கிஷன் பங்கேற்றது சர்ச்சையானது.
Trending
இந்நிலையில், இஷான் கிஷன் பொய்சொல்லிவிட்டு நாடு திரும்பி, பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சை பெறாமல், ஊர் சுற்றி வந்தது தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. இதனால், இனி இஷான் கிஷனை படிப்படியாக ஓரங்கட்ட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, அஜித் அகார்கருக்கு இஷான் கிஷன் மன்னிப்பு கடிதம் எழுதியதாக கூறப்படும் நிலையில், அதனையும் அகார்கர் ஏற்கவே இல்லையாம்.
அதன் விளைவாக எதிர்வரும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷானை பிசிசிஐ புறக்கணித்து சஞ்சு சாம்சன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்மூலம் இஷான் கிஷான் மீது பிசிசிஐ அதிருப்தியில் உள்ளது தெளிவாகியுள்ளது. இதனால் இஷான் கிஷான் இனி இந்திய அணியில் இடம்பிடிப்பது மிகவும் சிரமம் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் மற்றொரு இந்திய நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ புறக்கணிக்க தொடங்கியுள்ளது. நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான ஷாட்களை விளையாடி விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவரை அணியிலிருந்து நீக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக, இனி அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் தன்னை திருத்திக்கொண்டால் மட்டுமே மீண்டும் அணியில் இடம் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now