
சையத் முஷ்டாக் அலி உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் அருணாச்சல பிரதேஷ் மற்றும் ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேஷ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அருணாச்சல பிரதேஷ அணியின் பேட்டர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதிலும் குறிப்பாக அந்த அணியைச் சேர்ந்த எந்தவொரு பேட்டாரும் 20 ரன்களைத் தாண்டவில்லை. மேலும் அருணாச்சல பிரதேஷ அணியில் அதிகபட்சமாக அக்ஷய் ஜெய்ன் 14 ரன்களையும், டெசி டோரியா 13 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் அருணாச்சல பிரதேஷ அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களில் ஆல் அவுட்டானது. ஜார்கண்ட் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அன்குல் ராய் 4 விக்கெட்டுகளையும், ரவி குமார் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜார்கண்ட் அணிக்கு கேப்டன் இஷான் கிஷான் - உத்கர்ஷ் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர்.