
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் குறித்த பேச்சுகள் தொடங்கியதிலிருந்தே இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. ஏனெனில் இந்திய அணியில் விளையாடும் சில வீரர்கள் சர்வதேச தொடர்களையும் புறக்கணித்து ஐபிஎல் தொடருக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் இந்திய அணியின் சில முக்கிய வீரர்கள் பிசிசிஐயின் எதிர்ப்பையும் மீறி இதனைச் செய்துவருவதுதான் ஆச்சரியமான விஷயம்.
ஏனெனில் இந்திய அணி கடந்தாண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் அடங்கும். அத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த இஷான் கிஷான் பணிச்சுமை காரணமாக தொடரிலிருந்து விலகினார். ஆனால் பணிச்சுமையை காரணம் காட்டி அணியிலிருந்து வெளியேறிய அவர் அதன்பின் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றது சர்ச்சையானது.
இதனைத்தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலிருந்தும் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் பிசிசிஐ அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இஷான் கிஷன் இந்திய அணியில் இடம்பிடிக்காத பட்சத்தில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் பிசிசிஐ மறைமுகமாக கட்டளை விதித்திருந்தது. ஆனால் அவரோ பிசிசிஐயின் எச்சரிக்கையையும் மீறி, ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.