
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமீ. இவர் கிரிக்கெட்டில் ஜோலித்தாலும், அவரது திருமண வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக இல்லை என்பதோடு, அவரைப் பிரிந்து சென்ற மனைவி ஹசின் ஜகான், ஷமி மீது கண்டபடி குற்றச்சாட்டுகளை சுமத்திய சம்பவங்களும் நடந்தன. இதில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டும் அடங்கும்.
ஷமி தற்போது இந்திய அணிக்கு ஒரு பெரும் சொத்து. ஆனாலும் இந்த உயர்நிலையை அவர் எட்டுவதற்கான அவரது பயணம் எளிதானது அல்ல. தொழில்முறை கிரிக்கெட்டில் ஷமி எப்போதுமே நம்பமுடியாத திறமையான வேகப்பந்து வீச்சாளராகக் காணப்பட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கையை சமாளிக்க அவருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தன.
மனைவி ஹசின் ஜகானுடனான ஷமியின் உறவு முறிந்த பிறகு, அவர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஷமி 'மேட்ச் பிக்சிங்' செய்ததாக அவரது மனைவி குற்றம் சாட்டினார். இது குறித்து பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தியது. இந்நிலையில், ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இன்னொரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, ஷமி மீதான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள், அதன் மீது நடந்த விசாரணை போன்றவைகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.