முதலிடத்திற்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை - ரவி பிஷ்னோய்!
உலகின் நம்பர் ஒன் டி20 பௌலராக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் சிறப்பான ஒரு உணர்வு என இந்திய வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரில் முதலில் விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி நாளை டர்பன் நகரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐசிசி வீரர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இவர் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கானை பின்னுக்கு தள்ளி 699 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறார்.
Trending
இங்கிலாந்து அணியின் ஆதில் ரசீது மற்றும் இலங்கை அணியின் வணிந்து ஹசரங்கா ஆகியோர் 679 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் இலங்கை அணியின் மற்றொரு சுழற் புதிச்சாளரான மகேஷ் தீக்ஷனா 677 புள்ளிகளுடன் இருக்கிறார். ஐசிசி யின் முதல் ஐந்து ரேங்கில் இருக்கும் வீரர்களும் சுழற் பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடிய ரவி பிஷ்னாய் 5 போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அந்தத் தொடரின் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார் அவர். இதனைத் தொடர்ந்து தற்போது ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். சமீபகாலமாகவே இந்திய டி20 அணியின் முதல் தேர்வு சுழற் பந்துவீச்சாளராக இவர் விளங்கி வருகிறார்.
இதுவரை 21 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் ரவி பிஸ்னாய் 34 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 17.38 ஆகும். 16 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியது இவரது சிறப்பான பந்து வீச்சு. ஆசிய கோப்பை போட்டிகளுக்கு முன்பாக இந்திய அணி அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடியது. அதிலும் ரவி பிஸ்னாய் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளராக முன்னேறி இருப்பது குறித்து பேசிய ரவி பிஷ்னாய், “உலகின் நம்பர் ஒன் டி20 பௌலராக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் சிறப்பான ஒரு உணர்வு. அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பூமியிலிருந்து ஆகாசத்தில் பறப்பது போல் உள்ளது.
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்திற்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் அது நிஜமாகி இருக்கிறது. இந்த இடத்தில் தொடர்ந்து நீடிக்க விரும்புகிறேன். அதற்காக கடினமாக உழைக்க தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி” என தெரிவித்திருக்கிறார் .
Win Big, Make Your Cricket Tales Now