
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் அசத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஐசிசி தொடரில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
முன்னதாக அப்போட்டியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்தால் விளையாடாததால் வலுவான நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் நிலைமையை சமாளிப்பதற்காக ஷர்துள் தாக்கூர் நீக்கப்பட்டு முகமது ஷமி தேர்வான நிலையில் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டார்.
அதில் பந்து வீச்சு துறையில் மிரட்டலாக செயல்பட்ட முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்து உலகக் கோப்பையில் 2 முறை 5 விக்கெட்களை எடுத்த முதல் இந்திய பவுலராக சாதனை படைத்தார். மேலும் 234/4 என்ற வலுவான நிலைமையில் இருந்த நியூசிலாந்தை 274 ரன்களுக்கு இந்தியா சுருட்ட உதவிய அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார்.