
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அவிஷ்கா ஃபெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்தாலும் 240 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில் 35 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் கோலி, ஷிவம் தூபே, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் அக்ஸர் படேல் 44 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்திய அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெஃப்ரி வண்டர்சே 6 விக்கெட்டுகளையும், சரித் அசலங்கா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஜெஃப்ரி வண்டர்சே வென்றார்.