
இந்திய அணிக்கு சொந்த நாட்டில் நடக்கும் உலகக் கோப்பைக்கு முன்பாக, ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஆசியக் கோப்பை மற்றும் இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என இரண்டு தொடர்கள் இருந்தது. ஆசியக் கோப்பைக்குச் செல்வதற்கு முன்னால் இந்திய அணி குறித்து எந்த பக்கமும் பெரிய நம்பிக்கையான பேச்சுகளைப் பார்க்க முடியவில்லை. இந்திய அணியை உலகக் கோப்பை அரையிறுதி அணியாக தேர்ந்தெடுப்பவர்கள் கூட, இந்திய அணியின் குறை என்று எதையாவது சுட்டிக் காட்டவே செய்தார்கள்.
இந்த நிலையில்தான் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் இருவரும் சிறப்பான பேட்டிங் மூலம் வெளியே வந்தார்கள். மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல் என ஒரு படையே வெளியே வந்தது. இதில் மிக முக்கியமாக பந்துவீச்சில் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சிராஜ், குல்தீப் என நல்ல ரிதத்தில் இருப்பதை காட்டினார்கள்.
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டது. இந்திய அணி மீதான எல்லா அவநம்பிக்கைகளையும் துடைத்து விட்டது. இதையெல்லாம் தாண்டி இந்திய அணியில் ஸ்ரேயாஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் தங்களை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருந்தார்கள். அதே சமயத்தில் இவர்கள் இருவரும் விளையாடும் அணியில் இடம்பெறும் வாய்ப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.