
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மழையால் சில போட்டிகள் ரத்தானது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. குரூப் 1 போட்டிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டன. குரூப் 2இல் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே போட்டி மட்டுமே மழையால் பாதிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. மற்ற போட்டிகள் அனைத்தும் முழுமையாக நடந்தன.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பும்ரா இல்லாதது பாதிப்பாக அமையாதவகையில், அருமையாக விளையாடி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஜிம்பாப்வேவுடன் புள்ளியை பகிர்ந்த தென் ஆப்பிரிக்கா, அடுத்த போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக அபார வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது.
இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக திகழ்வதால் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே வரும் 30ம் தேதி பெர்த்தில் நடக்கும் போட்டி மிக சுவாரஸ்யமாக இருக்கும். இந்திய அணியை பொறுத்தமட்டில் ரோஹித், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நல்ல ஃபார்மில் சிறப்பாக பேட்டிங் ஆடிவருகின்றனர். ராகுல் மட்டுமே கவலையளிக்கிறார். இந்திய அணி முந்தைய 2 போட்டிகளிலும் டெத் பவுலிங் சிறப்பாக வீசியிருந்தாலும், அது இன்னும் கவலையாகவே உள்ளது. ஆனால் புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் அருமையாக பந்துவீசிவருகின்றனர்.