
இந்தியா மகளிர் - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய இந்தியா 104.3 ஓவரில் 428 ரன்களில் ஆல் அவுட்டானது. சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதமடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து சார்பில் லாரன் பெல், எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 35.3 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டும், ஸ்நே ரானா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின் 298 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இந்திய அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து சார்பில் சார்லி டீன் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 479 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது.