பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில்முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு அணிகளும் சமபலத்துடன் மோதி வருவதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறுவதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதுவரை இங்கிலாந்து அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டோக்ஸ் 13 சதம், 31 அரைசதங்கள் என 6251 ரன்களையும், பந்துவீச்சில் 197 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். நாளைய போட்டியின் மூலம் 100ஆவது டெஸ்டில் விளையாடும் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்டில் விளையாடிய 16ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறவுள்ளார்.