தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் விளக்கமளித்துள்ளேன் - ரோஹித் சர்மா!
ஆசியக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத முக்கிய வீரர்களிடமும் ஆலோசனை செய்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான சாஹல், அஸ்வின் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. இதன் மூலம் உலகக்கோப்பைத் தொடருக்கும் இவர்கள் தேர்வு செய்யப்படுவது கடினம் என்பது மறைமுகமாகவே தெரிகிறது. இந்த நிலையில் தேர்வு செய்யப்படாத வீரர்களுக்கு, ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்ற விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “சில சிறந்த வீரர்கள் காம்பினேஷன் காரணங்களால் விடுபட்டுள்ளனர். நானும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இணைந்து தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் விளக்கம் அளித்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் அணித் தேர்வுக்கு பின் பேசி இருக்கிறோம். பிளேயிங் லெவன் தேர்வு செய்யப்படும் போது இளம் வீரர்களுக்கு கூறிவோம். அவர்களின் முகத்திற்கு முன் நேரடியாக ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதை தெளிவாக கூறிவிடுவோம்.
Trending
சில நேரங்களில் அவர்களின் இடத்தில் என்னை வைத்து பார்ப்பேன். ஏனென்றால் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் நான் தேர்வு செய்யப்படாதது என்னை மனதளவில் நொறுங்க செய்தது. உலகக்கோப்பைத் தொடருக்கு தேர்வு செய்யப்படாத போது, இதற்கு மேல் என்னிடம் எதுவுமே இல்லை என்று புலம்பி இருக்கிறேன். பயிற்சியாளர்கள், தேர்வுக் குழுவினர் அனைவரும் எதிரணி, ஆடுகளம், பலம், பலவீனம், மைதானம் என்று அனைத்தையும் கணக்கில் கொண்டே தேர்வு செய்கிறார்கள்.
ஆனால் சில நேரங்களில் தவறு நடக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் நாம் அனைவருமே மனிதர்கள் தான். எல்லோரும் எல்லா நேரங்களிலும் சரியாக செயல்பட முடியாது. ஒரு வீரரை பிடிக்காது என்பதற்காக யாரும் அவரை அணியில் இருந்து நீக்கிவிட முடியாது. கேப்டன்சி என்பது பிடிக்கும், பிடிக்காது என்பதல்ல. எந்த வீரராவது நீக்கப்பட்டால் நிச்சயம் காரணமில்லாமல் இருக்காது. சில நேரங்களில் அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்தால் கடினம் தான்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now