
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய அசலங்கா சதமடித்து 108 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டன்சிம் ஹசன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 280 ரன்கள் துரத்திய வங்கதேசத்திற்கு கேப்டன் சாகிப் அல் ஹசன் 82 ரன்களும் நஜ்முல் சாண்டோ 90 ரன்களும் எடுத்து 41.1 ஓவரிலேயே வெற்றி பெற உதவினார்கள்.
அதனால் அதிகபட்சமாக மதுசங்கா 3 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியாத இலங்கை தொடரில் 6ஆவது தோல்வியை பதிவு செய்து லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இந்நிலையில் இப்போட்டியில் பேட்டிங்கில் 30 – 40 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுக்க தவறியது தோல்விக்கு காரணமாக அமைந்ததாக இலங்கை கேப்டன் குஷால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.