
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து, அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் தாமாக முன்வந்து களமிறங்கினார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தனது வழக்கமான இடத்தை விட்டு தொடக்க வீரராக களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இதனால் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன. மேற்கொண்டு மிடில் ஆர்டர் வீரர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், இத்தொடரில் இருந்து விலகியுள்ளதான் காரணமாக அவரது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தனது பழைய பேட்டிங் வரிசையான 4ஆம் இடத்தில் களமிறங்குவார் என்று அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி சமீபத்தில் உறுதிசெய்தார். இதன் காரணமாக டிராவிஸ் ஹெட்டை உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.