
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆடுகளம் ஆரம்பத்திலேயே மெதுவாகத்தான் இருந்தது. பவர் பிளே முடிந்து ஸ்பின்னர்கள் வர பேட்மேன்களுக்கு கொஞ்சம் கடினமாக ஆரம்பித்தது. பந்து நன்றாக தேய்ந்ததும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் களுக்கு என்ன செய்வது? என்றே தெரியவில்லை.
உலகத்தரம் வாய்ந்த இந்திய ஸ்பின்னர்கள் அஸ்வின், குல்தீப், ஜடேஜா மூவரும் சேர்ந்து மும்மூனை தாக்குதல் நடத்தி ஆஸ்திரேலியா அணியை நிலைகுலைய வைத்து விட்டார்கள். பந்து தேய்ந்து கொஞ்சம் சுழல ஆரம்பித்ததும் ஜடேஜாவை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் கணிக்கவே முடியவில்லை. ஸ்மித், லபுசேன் என உலகத்தரம் வாய்ந்த பேட்மேன்கள் அவரிடம் அகப்பட்டு ஆட்டம் இழந்தார்கள். இத்தோடு சேர்த்து அலெக்ஸ் கேரியையும் அனுப்பி வைத்தார்.
ரவீந்திர ஜடேஜாவின் அதிரடியான பந்து வீச்சின் காரணமாக ஆஸ்திரேலியா அந்த இடத்திலேயே முடங்கி விட்டது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆல்அவுட் செய்யப்பட்டதில் ஜடேஜாவின் பங்கு முதன்மையானது. இன்று அவர் 10 ஓவர்களில் 2 மெய்டன்கள் செய்து, 3 விக்கெட்டுகள் கைப்பற்றி, 28 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார்.