
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி 8ஆவது சீசன் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இத்தொரில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட இடம் பெறாதது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. ஏனெனில் 2015இல் அறிமுகமாகி 2019இல் 2ஆவது போட்டியில் விளையாடிய அவருக்கு 2021 வரை ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டும் நிலையான தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் 2022 சீசனில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அதன் பின் வாய்ப்பு பெற்று அயர்லாந்து தொடரில் முதல் முறையாக அரைசதம் அடித்து 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு பங்காற்றினார். ஆனாலும் சீனியர்கள் வந்ததால் தொடர்ச்சியான வாய்ப்பை பெறாத அவர் அதைத் தொடர்ந்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டார். ஆனாலும் அவருக்கு டாட்டா காட்டிய தேர்வுக்குழு வழக்கம் போல டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் இப்பொது வரை சுமாராக செயல்பட்டு வரும் ரிஷப் பந்தை மீண்டும் உலக கோப்பையில் தேர்வு செய்தது.
அதனால் ஏற்பட்ட ரசிகர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக சஞ்சு சாம்சன் இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். சென்னை சேப்பாக்கத்தில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக நடந்த அந்தத் தொடரில் பேட்டிங்கில் அசத்திய அவர் கேப்டனாக 3 – 0 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்ததால் கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் தேர்வானார்.