WI vs AUS: ஆஸ்திரேலிய டி20 அணியில் இருந்து ஹேசில்வுட், ஜான்சன் விலகல்; மெக்குர்க், பார்ட்லெட்டிற்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஹேசில்வுட், ஜான்சன் ஆகியோர் விலகிய நிலையில், ஃபிரேசர் மெக்குர்க், பார்ட்லெட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Australia T20 Squad: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோர் விலகியுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஜமைக்காவில் நடைபெறவுள்ளது.
அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அறிமுக வீரர்காள் மிட்செல் ஓவன், மேத்யூ குன்னமேன் உள்ளிட்டோருடன், காயத்தில் இருந்து மீண்டுள்ள கேமரூன் க்ரீன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோர் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹேசில்வுட் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தென் ஆப்பிரிக்க தொடருக்காக தயாராவதற்கும், ஸ்பென்ஸர் ஜான்சன் காயம் காரணமாகவும் இந்த டி20 தொடரில் இருந்து விலகியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக அதிரடி தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட் உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய டி20 அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதன் காரண்மாக இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Also Read: LIVE Cricket Score
ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், கூப்பர் கோனொலி, டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட், ஜோஷ் இங்கிலிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், மாட் குஹ்னெமன், க்ளென் மேக்ஸ்வெல், மிட்ச் ஓவன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா.
Win Big, Make Your Cricket Tales Now