
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 121 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஸக் கிரௌலி 76 ரன்களையும், ஒல்லி போப் 57 ரன்களையும் சேர்க்க அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜோ ரூட் 15 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 25 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களை கடந்தனர்.
அதன்பின் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 50 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரி ப்ரூக்கும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் கஸ் அட்கின்ஸன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணியானது 371 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.