
உலகக் கிரிக்கெட்டில் 41 வயதை தொட்டு வேகப்பந்துவீச்சாளராக இந்த நொடியிலும் ஒரு வீரரின் கால்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஓடிக்கொண்டே இருக்கிறது என்றால், அது இங்கிலாந்தின் ஸ்விங் கிங் ஜேம்ஸ் ஆண்டர்சன்தான். தன்னுடைய ஸ்விங் வேகப்பந்து வீச்சால் உலகின் பல முன்னணி பேட்ஸ்மேன்களையும் தடுமாற விட்டு, கிரிக்கெட் ரசிகர்களுக்கு பந்தின் மூலம் கண்காட்சி காட்டியவர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இதுவரை 182 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 689 விக்கெட்டுகளை கைப்பற்றி, வேகப்பந்து வீச்சு கலையில் தனி முத்திரை பதித்து, இப்பொழுதும் அசராமல் ஓடிக் கொண்டிருக்கிறார். இன்று ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 41 வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொது இங்கிலாந்தில் நடந்து கொண்டிருக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் இவரது பந்துவீச்சு கூட்டாளி ஸ்டூவர்ட் பிராட்.
இதுவரை இவர் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 600 சர்வதேச டெஸ்ட் விகெகட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்டூவர்ட் பிராட் இவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடி, இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் அமைத்து, மொத்தமாக 1037 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள். கிரிக்கெட் உலகில் உடைக்க முடியாத ஒரு சாதனை இருக்கும் என்றால் நிச்சயமாக இந்தச் சாதனையை சொல்லலாம்.