
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தாலும், கேப்டன் தனஞ்செயா டி சில்வா மற்றும் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 236 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டி சில்வா 74 ரன்களிலும், அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்கா 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஷோயப் பசீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 18 ரன்களிலும், டேன் லாரன்ஸ் 30 ரன்களிலும், கேப்டன் ஒல்லி போப் 6 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 42 ரன்களுக்கும், ஹாரி புரூக் 56 ரன்களுக்கும், கிறிஸ் வோக்ஸ் 25 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஜேமி ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். பின்னர் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமி ஸ்மித்தும் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணியானது 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.