ஐபிஎல் 2023: ஜேசன் ராயை ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஷாகிப் அல் ஹசனுக்கு மாற்று வீரராக ஜேசன் ராயை ஒப்பந்தம் செய்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற முடியாது என்றுக்கூறி, இந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். அவருக்கு பதிலாக மாற்றுவீரரை அறிவித்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம்.
இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த வருடம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக விலகியுள்ளார். சர்வதேச போட்டிகள் இருப்பதால் இந்த வருட ஐபிஎல்லில் பங்கேற்க முடியாது என்று ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் விலகிவிட்டார்.
Trending
முன்னணி வீரர்கள் அணியில் இல்லாததால் கொல்கத்தா அணி சற்று திணறி வருகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் டக்வோர்த் லூயிஸ் முறைப்படி தோல்வியை தழுவியது.
தனது இரண்டாவது போட்டியை சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சகிப் அல் ஹசன் இருவருக்கும் மாற்று வீரராக யாரை கொண்டு வருவர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக நிலவி வந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் முதல்வீரராக உள்ளே எடுக்கப்பட்டிருக்கிறார். ஆரம்ப விலையான 1.5 கோடி ரூபாய்க்கு இருந்த இவரை 2.8 கோடி ரூபாய் கொடுத்து எடுத்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இன்னும் சில வீரர்களையும் எடுக்க உள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன.
ஷாகிப் அல் ஹசன் வெளியேறியதால் அவருக்கு பதிலாக சிறந்த பார்மில் இருக்கும் இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனக்கா எடுத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் முந்திக்கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, காயம் காரணமாக வெளியேறிய கேன் வில்லியம்சனுக்கு பதிலாக சனக்காவை ஒப்பந்தம் செய்துவிட்டது.தற்போது மற்றொரு வெளிநாட்டு ஆல்ரவுண்டருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வலைவீசி தேடிவருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now