
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியுள்ளது.
முன்னதாக இப்போட்டியின் போது இங்கிலாந்து அணி வீரர் ஒல்லி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வந்த தருணத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா வேண்டுமென்றே அவர் ரன் ஓடும் போது பிட்சில் நின்றார். இதுகுறித்து அப்போதே ஒல்லி போப் போட்டி நடுவரிடம் முறையிட்டதால் இது சர்ச்சையானது. ஆனால் போட்டி முடிந்த பின் இருவரும் கைக்குலுக்கி சமாதானமாக சென்றனர்.
இந்நிலையில் போட்டியின்போது ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி விதிமுறையை மீறியதற்காக ஐசிசி கண்டித்துள்ளது. மேலும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள நன்னடைத்தை புள்ளிகளில் ஒன்றையும் ஐசிசி அபராதமாக வழங்கியுள்ளது. இதுகுறித்து ஐசிசி கூறுகையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி விதிமுறையை மீறியுள்ளார். ஐசிசியின் விதிமுறையை மீறியதற்காக பும்ராவை கண்டிப்பதுடன் அவருக்கு நன்னடத்தை புள்ளிகளில் ஒன்றும் குறைக்கப்படுகிறது.