
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டு 2 - 0 என முன்னிலையில் உள்ளது. இந்த 2 போட்டிகளும் வரும் மார்ச் 1ஆம் தேதி மற்றும் மார்ச் 9ஆம் தேதிகளில் தொடங்கவுள்ள சூழலில் இதற்கான இந்திய அணி நேற்று தான் அறிவிக்கப்பட்டது. இதிலும் பும்ராவின் பெயர் இல்லாதது தான் சர்ச்சைக்கு காரணம்.
கடந்தாண்டு ஜூலையில் நடந்த இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் போது முதுகில் காயம் ஏற்பட்டு சென்ற ஜஸ்பிரித் பும்ரா, 3 மாதங்களாக ஓய்வில் இருந்தார். அதன்பின்னர் டி20 உலகக்கோப்பைக்காவது வந்துவிடுவார் என்று நம்பிய போது, செப்டம்பர் மாதம் இரண்டே போட்டிகளில் விளையாடிவிட்டு மீண்டும் காயம் எனக்கூறி சென்றுவிட்டார். அன்று சென்றவர் இன்று வரை இந்திய அணியுடன் இணையாமலேயே தான் இருந்து வருகிறார்.
பும்ராவுக்கு முதுகு வலி பிரச்சினைகள் தீர்ந்துவிட்டது, அவர் ஆஸ்திரேலியாவுடனான 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்டிற்கு வந்துவிடுவார் எனக்கூறினர். எனினும் கடைசி நேரத்தில் அவருக்கு என்.சி.ஏ அதிகாரிகள் ஃபிட்னஸ் சான்றிதழ் கொடுக்கவில்லை என்பதால் சேர்க்கவில்லை. இதன் மூலம் இனி பும்ரா ஐபிஎல் தொடருக்கு தான் நேரடியாக வருவார் என்பது நிரூபணமாகியுள்ளது.