
இந்திய அணியில் அறிமுகமாகி அதன்பின் காணாமல் போன வீரர்களில் ஏராளமானோர். அதில் ஜெய்தேவ் உனத்கட்டும் ஒருவர். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக செஞ்சூரியனில் கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர் ஜெய்தேவ் உனத்கட். அப்போது அவருக்கு வயது 19 தான். ஆனால் அதன் பிறகு டெஸ்ட் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதனால் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடும் அவர், உள்நாட்டு தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் அணியில் நிரந்த இடம் அவருக்கு கிடைக்கவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து இவரை அணிகள் வாங்கின.
இதுவரை ஒரு டெஸ்ட், ஏழு ஒருநாள், 10 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதிலும் இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 353 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். மேலும் 2019-2020 ரஞ்சி தொடரில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தி சவுராஷ்டிரா அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தார்.