
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அடுத்த பதிப்பானது 2026ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஐரோப்பா கண்டத்திலுள்ள அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இத்தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று நடைபெற்றது. இதில் இத்தாலி மற்றும் ருமேனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ருமேனியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இத்தாலி அணியானது ஜோ பர்ன்ஸ் மற்றும் ஜஸ்டின் மொஸ்கா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைக் குவித்திருந்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ பர்ன்ஸ் 12 பவுண்டரி, 4 சிக்ஸர் என 108 ரன்களையும், ஜஸ்டின் மொஸ்கா 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 72 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ருமேனியா அணி பேட்டர்கள் இத்தாலி அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதன் காரணமாக அந்த அணி 17.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இத்தாலி அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.