ஐபிஎல் ஏலத்தில் ஜோ ரூட்; சிஎஸ்கே தேர்வு செய்ய வாய்ப்பு?
2023 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பிரபல இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முடிவு செய்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஜோர் ரூட் பங்கேற்றபோது அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. அதன்பின் 2019 மே மாதத்துக்குப் பிறகு அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை. இந்நிலையில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் அதற்குத் தயாராவதற்காக ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.
சுழற்பந்துவீச்சை நன்கு விளையாடும் திறமை கொண்ட ஜோ ரூட், பந்துவீச்சிலும் பங்களிப்பார் என்பதால் சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் ஜோ ரூட்டைத் தேர்வு செய்ய முயற்சி எடுக்கும் என அறியப்படுகிறது. ட்விட்டரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஜோ ரூட்டை சிஎஸ்கே அணி தேர்வு செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஒரு நல்ல மாற்று வீரராகவும் ஜோ ரூட்டை சிஎஸ்கே எண்ண வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது 31 வயதாகும் ஜோ ரூட், இங்கிலாந்து அணிக்காக 2012 முதல் 124 டெஸ்டுகள், 158 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். பந்துவீச்சில் டெஸ்டில் 47 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 26 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now