
வங்கதேச அணிக்கு எதிராக இன்று தர்மசாலா நகரில் நடைபெற்ற நடப்பு உலகக் கோப்பை தொடரின் ஏழாவது லீக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தொடக்க வீரரான டேவிட் மலானின் சிறப்பான ஆட்டம் காரணமாக ஆரம்பத்தில் இருந்தே அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 364 ரன்கள் குவித்து அசத்தியது.
பின்னர் 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.