
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா பரவல் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் பதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
முன்னதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கையில் ஏற்பட்டிருந்த காயத்தால் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஆர்ச்சர், இங்கிலாந்தின் கவுண்டி அணியான சசெக்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடத் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், சசெக்ஸ் கிரிக்கெட் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தால் எப்படியும் சீக்கிரம் வீடு வந்திருக்கலாம். மீண்டும் ஐபிஎல் நடைபெறும் என்று அறிவித்தால், நான் விளையாட முடியும் என்று நம்புகிறேன். காயம் ஏற்பட்டவுடன் இந்தியாவுக்குச் செல்லக்கூடாது என்பது நான் எடுத்த கடினமான முடிவு. நான் நிச்சயம் இந்தியா சென்றிருக்க முடியும். அப்படி சென்றிருந்தால், என்னால் எத்தனை போட்டிகளில் ஆடியிருக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஐபிஎல் மீண்டும் தொடங்கினால் நான் ராஜஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.