
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இந்த தொடரில் நட்சத்திர வீரர் ரசித் கான் காயத்தால் வெளியேறியது ஆஃப்கானிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் எஞ்சிய வீரர்களுடன் முதல் 2 போட்டிகளில் விளையாடிய அந்த அணி முடிந்தளவுக்கு போராடியும் தோல்வியை சந்தித்தது.
குறிப்பாக 2ஆவது போட்டியில் 172 ரன்கள் குவித்த ஆஃப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. இருப்பினும் சிவம் துபே, ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி அந்த இலக்கை மிகவும் எளிதாக சேசிங் செய்தனர். அந்த வகையில் தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் ஆஃப்கானிஸ்தானின் ஆட்டம் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றே சொல்லலாம்.
இதை தொடர்ந்து நாளை பெங்களூருவில் நடைபெறும் கடைசி போட்டியில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. அதில் கடந்த 2 போட்டிகளில் செய்த தவறுகளில் பாடத்தை கற்றுக் கொண்டு ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு போராடும் என்று பயிற்சியாளர் ஜொனதன் டிராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக 7 – 16 வரையிலான மிடில் ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் அளவுக்கு பந்து வீசும் திட்டம் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.