
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 2010/11-பின் முதல் முறையாக சமன் செய்து அசத்தியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அந்தத் தொடரை சமன் செய்து புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்திற்கும் முன்னேறிய இந்தியா அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
கடந்த 2012-பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியான ஆட்டத்தை பின்பற்றி நிறைய வெற்றிகளை குவித்து வரும் இங்கிலாந்து இத்தொடரில் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆனாலும் அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய ஸ்பின்னர்களைத் தாண்டி சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் இங்கிலாந்து வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஸ்வின் போன்ற ஸ்பின்னர்கள் இத்தொடரில் தங்களுக்கு பெரிய சவாலை கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.